Pages

Thursday 7 July 2011

செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம்.

               செல்போன் கம்பெனிகளைப்போல மக்களை சுரண்டும் செயலை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது.இன்று எழுத படிக்கத் தெரியாத சாதாரண மனிதனின் கையில்கூட செல்போனை பார்க்கமுடியும்.கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றி பணம் பிடுங்கிக் கொண்டிருக்கின்றன.காலர் டியூன்,ஜோக்ஸ் என்று எத்தனை கோடி மக்களிடம் பத்து ரூபாயிலிருந்து ஆரம்பித்து மோசடி செய்திருப்பார்கள் என்று கணக்கிட்டுப்பாருங்கள்.இது குறித்து பல மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்ட பதிவிலிருந்து சில வரிகள் கீழே..

             பஸ் ஸ்டாண்டில் காய்கறி விற்கும் பெண் அவர்.ஒரு செல்போன் வைத்திருக்கிறார்.அவருடைய நம்பர் அவருக்கு தெரியாது.யாராவது போன் செய்தால் எடுத்து பேசுவார்.அவர் போன்லிருந்து பேசவேண்டுமானால் யாருடைய உதவியாவது தேவை.ஒரு நாள் ரீசார்ஜ் செய்யும் கடைக்காரரிடம் பெரிய சண்டை.ரீசார்ஜ் செய்தால் பணமே இருப்பதில்லை.கடைக்காரர் ரீசார்ஜ் செய்து பரிசோதித்து பார்த்தபோது உடனடியாக பணம் கழிக்கப்பட்டிருந்தது.

            செல்போன் கம்பெனிகளுக்கு டெலிமார்கடிங் என்றொரு அமுதசுரபி இருக்கிறது.அவர்கள் போன் செய்து ஒன்றை அழுத்து,இரண்டை அழுத்து என்பார்கள்.மேற்கண்ட காய்கறி விற்கும் பெண்ணைப்போல எத்தனை பேர் இருக்கிறார்கள்?படிக்காத ஏழை இந்தியர்களுக்கு இந்த எழவெல்லாம் என்னத்தை தெரியும்?யாரோ போன் செய்கிறார்கள் என்று நினைத்து எடுத்து பேச ஒன்றும் புரியாமல் ஏதோஒன்றை அழுத்துவார்கள்.அல்லது எதையும் செய்யாமல் அவர்களாகவே பணம் பிடித்துக்கொள்வார்கள்.


                இன்று காலை பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு ரீசார்ஜ் செய்யப்போனபோது அந்நிறுவனத்தின் அதிகாரி ஒரு இனிக்கும் தகவலை சொன்னார்.இனி மேற்கண்ட அவலங்கள் இருக்காதாம்.ஒன்றை அழுத்து,இரண்டை அழுத்து என்பதும் பணம் பிடித்துக்கொள்வதும் ஆகிய உரிமை மீறல்கள் இருக்க க்கூடாது என்று தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.

                  காலர்டியூன்கள் வைக்க வேண்டுமானால் இனி நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.உதாரணமாக ஒருவர் என்னுடைய அனுமதி இல்லாமல் பணம் பிடித்துவிட்டார்கள் என்று நுகர்வோர் நீதிமன்றம் போனால் செல்போன் கம்பெனி நீங்கள் வேண்டுகோள் வைத்த்தை உறுதி செய்ய வேண்டும்.


                எஸ்.எம்.எஸ் மூலமோ அல்லது இ-மெயில் மூலமோ ஒருவருடைய வேண்டுகோள் இருந்தாலன்றி அவர்களாக ஆக்டிவேட் செய்ய முடியாது.இதற்கு முன்பு பணம் காணாமல் போன பின்னர் போன் மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டால்தான் நீங்கள் செய்தி சேவை வைத்திருக்கிறீர்கள் என்பார்கள்.இனியும் இப்படி ஏமாற்றி பணம் பறிக்கமுடியாது.

              முன்பே சொன்னது போல கோடிக்கணக்கான பரம ஏழைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள்.செல்போன் நிறுவன்ங்கள் சுரண்டிக்கொழுத்தன.போட்டியில் கால் ரேட்டை குறைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்ட பிறகு மோசடி வேலை செய்து சம்பாதித்தார்கள்.அதற்கு ஆப்பு வைத்திருக்கிறது ஆணையம்.

No comments: